நான் குப்பையில் கிடப்பேன், நீங்களும் வரலாம்!
ம.செந்தமிழன்
ம.செந்தமிழன்
குப்பைமேனிக்கான காலம். இக்காலத்தில் சிக்கல்கள் மிகுந்துவிட்டன, நோய்கள் பெருகிவிட்டன, இவற்றுக்கான காரணங்களை உணர்ந்து திருந்தும் சிந்தனை கொண்டோர் குறைவாகவே உள்ளனர். நல்வழிகளைக் காட்டிய நல்லோர் வீற்றிருந்த கோபுரங்களில் இப்போது சாத்தான்கள் குடிகொண்டுள்ளன. பெரும் கூட்டம் அந்த கோபுரங்களைக் கோயில்களாக வழிபடுகின்றது.
எல்லாவற்றிற்கும் ஆசைப்பட வேண்டும், எல்லாவற்றையும் அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும், சக மனிதர்களைப் பற்றிச் சிந்திப்பது பாவம், சக உயிரினங்களைச் சிதைப்பதுதான் நாம் வாழத் தேவையான நியதி என்றெல்லாம் வேதங்கள் ஓதப்படுகின்றன.
பாவம் செய்து சேகரிக்கும் செல்வம், புறச் சூழலை அழகாக்கும் அகத்தில் அழிவைத் தரும் என்ற படைப்பின் விதியைக் கற்றுத் தருவதற்கு உயர்ந்த மனிதர்கள் முன்வரவில்லை. அவ்வாறு முன்வந்தால் முதலில் அவர்கள் தரைமட்டமாக வேண்டி இருக்கும். ஏனெனில், அவர்களது கோட்டையின் ஒவ்வொரு கல்லும் மணல் துகளும் பாவிகளின் செல்வம் கொண்டு கட்டமைக்கப்பட்டவை. எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று உபதேசிக்கும் பெரும்பாலான பெரும்புள்ளிகளின் அரண்மனைகள் பல்லாயிரம் உயிரினங்களின் வாழ்விடத்தை அழித்துக் கட்டப்பட்டவைதான். எளிமையைப் பற்றிய எல்லா உபதேசக் கூட்டங்களும் கோடிகளைக் கொட்டி இழைக்கப்பட்ட மாளிகைகளில்தான் நிகழ்கின்றன.
இறைவனைக் காட்டுவதாகக் கூறும் அழைப்புகளின் நோக்கம் தன்னையே இறைவனாக முன் நிறுத்துவதுதான். நிலத்திற்கேற்ற இயல்புகளுடன் வாழும் மனிதர்களுக்கு இறைவழிகாட்டிகள் தேவையில்லை. ஏனெனில் தமது அகத்தில் உறையும் இறையைப் புறத்தில் எந்த மனிதரும் காட்ட இயலாது என்பதை, மரபுவழி வாழ்வியல் உணர்த்திவிடும்.
தேவைக்கதிகமாகத் தேங்கும் நீரில் புழுக்கள் உருவாகும்.
தேவைக்கதிகமாகத் தேங்கும் நீரில் புழுக்கள் உருவாகும்.
இப்போதைய சமூகமே இவ்வாறான தேங்கிய நீரில்தான் குடிகொண்டுள்ளது. பெருகிக்கொண்டுள்ள தொழிற்சாலைகள், அவற்றின் நச்சுப் புகை மேகங்கள், நீக்கமற நிறைந்துள்ள செயற்கைச் சாதனங்கள், அழியும் காடுகள், ஒழியும் உயிரினங்கள், தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரியாத குழந்தைகள், நடக்க இயலாத மாடுகள், கழுத்தை அறுத்தாலும் கத்தாத கோழிகள் அந்தக் கோழிகளின் வழியாகக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ’சைவமே சரி’ என்று முழங்கும் பெருமான்கள், என சமகாலச் சூழல் விந்தையான காட்சிகளைக் காட்டிக்கொண்டுள்ளது.
கோபுரங்களை நிராகரித்துவிட்டு குப்பைமேடுகளைத் தேடும் மனிதர்களுக்கான கட்டுரை இது. நமது குப்பை மேடுகளில்தான் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான தீர்வுகள் புதைந்துள்ளன. உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான உடல்நோய்களைத் தீர்க்கும் எல்லா மூலிகைகளும் குப்பைகளில்தான் முளைக்கின்றன..
இந்தக் குப்பைகள் அழுக்காக இருப்பதால், கோபுரவாசிகள் இங்கு வருவதில்லை. அவர்கள் வராததால், இந்தக் குப்பைகள் இன்னும் புனிதமானவையாகவே இருக்கின்றன. குப்பைகள் அழுக்காக இருப்பதால்தான் அவற்றில் புழு பூச்சிகள் வாழ்கின்றன. இந்தக் குப்பைகளில்தான் நமக்கான தீர்வுகள் புதைந்துள்ளன.
நம் பிள்ளைகள் தமது தூய கரங்களை இந்தக் குப்பைகளில்தான் அழுக்காக்க வேண்டும். இந்த அழுக்குப் படிந்துவிட்டால், அவர்களது விரல்கள் கணினி விளையாட்டுகளைச் சீண்டாது. இங்கு வந்து புழுதியை அப்பிக்கொண்டால் குழந்தைகளின் தோலுக்குப் பன்னாட்டு பாதுகப்பு மருந்துகள் தேவையில்லை. அழுக்கை விட சிறந்த பாதுகாப்பை சோப்புகளால் தர முடியாது.
நாம் சேற்றில் புரண்டால் இழிவென்பவர்கள்தான், நட்சத்திர விடுதிகளில் சேற்றுக் குளியலுக்கென பல்லாயிரம் பணத்தைச் செலவழிக்கிறார்கள். நாம் வாய்க்காலில் குளிப்பதை இழிவென்பவர்கள்தான், மருத்துவ விடுதிகளில் வளர்ப்பு மீன்கள் கடிப்பதற்காகப் பணம் வீசுகிறார்கள், கிராம தெய்வத்தின் முன்னால் மருள் வந்தாடுவதை மூடத்தனம் என்போர்தான் ஆன்மீகப் போலிகளின் முன்னால் கூத்தாடிக் கொண்டுள்ளார்கள், நாம் மாடு வளர்த்தால் கேவலம் என்பவர்கள்தான் பெரும்பண்ணைகளை அமைத்து உலகுக்கே பால் ஊற்றுகிறார்கள்.
எவ்வளவு பெரிய சீமானும், சீமாட்டியும் நாம் வாழும் குப்பை மேட்டுக்கு வந்துதான் தீர வேண்டும்.
தூய்மையின் சின்னமாக வாழ்ந்தாலும் மண்ணில் புரண்டுதான் கதிமோட்சம் பெற முடியும். ஏன் தெரியுமா? நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள். ஒரு பிடி மண்ணைக் குழைத்து நம்மைச் செய்தார் படைப்பாளர். நாம் மண்ணின் பிள்ளைகள். நாம் குப்பையின் பிரதிநிதிகள். நாம் படைத்தவரின் விருப்பத்திற்கு இணங்கும் செல்லங்கள். நாம் குப்பைகளைப் போற்றுவோம், குப்பைகளில் புரளுவோம்.
குப்பைமேனியை மனிதர்கள் விதைக்கத் தேவையில்லை. அது தேவையுள்ள ஊர்களின் குப்பைகளில் தாமாகவே முளைக்கும். எங்கெல்லாம் நீர் தேங்குமோ, எங்கெல்லாம் மனித நுரையீரல் சேதமுறும் வாய்ப்புள்ளதோ, எங்கெல்லாம் காற்றில் கரியமிலம் மிகுந்துள்ளதோ அங்கெல்லாம் குப்பைமேனி அனுப்பப்படுகிறது.
ஒரு மூலிகைச் செடி முளைக்கிறதென்றால், அது முளைக்கும் சூழலில் அதற்கான தேவை இருக்கிறது எனப் பொருள். வெப்பத்தின் தாக்குதலைச் சமாளிக்க வேண்டிய இடத்தில்தான் கற்றாழை முளைக்கும்.
குப்பைமேனி எல்லோருக்குமானது. ஆனால், அதை எளியோர் மட்டும்தான் காண்கின்றனர். எந்த நோய்க்கும் தீர்வு காணும் மருந்து இல்லாத மருத்துவமனைகளின் சாக்கடை ஓரங்களில் குப்பைமேனி முளைத்துக் கிடக்கும். அதன் மீது எச்சில் துப்பும் மனிதர்களுக்குத் தெரியாது, இந்தக் குப்பைமேனியை முறையாக உள்வாங்கினால் மருத்துவமனையே தேவையில்லை என்ற உண்மை.
எனது செம்மை குடும்பத்துத் தங்கை முனைவர் துர்காவிடம் குப்பைமேனியைப் பற்றிய நவீன ஆய்வுகளைத் தொகுக்கச் சொன்னேன். அவர் தந்துள்ள அறிக்கைகளின் சுருக்கம் குப்பைமேனி மீதான எனது நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. சளி முதல் புற்று வரைக்குமான எண்ணற்ற தொல்லைகளுக்கு குப்பைமேனி அருமருந்து என நவீன மருத்துவ ஆய்வுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
குப்பைமேனியும் இறைதான். அது எளிமையானது, தேவைப்பட்டால் முளைப்பது, எளியோர் கண்களுக்கு மட்டும் காட்சி தருவது, குறிப்பாக எந்தப் பகட்டுமில்லாமல், குப்பை மேட்டிலும் தெருவோரத்திலும் கூட வாழ்வது. குப்பைமேனியின் பேரால் திருவிழா நடத்துகிறோம். நமது மரபுகளின் உன்னதங்களை மீட்டெடுக்கும் செயலாக இவ்விழாவை நடத்துகிறோம். குப்பைமேனியைப் பற்றி மட்டுமல்ல, நமது மூலிகைகள் பலவற்றைப் பற்றிய விளக்கங்கள் விழாவில் இடம் பெறவுள்ளன.
செம்மைவனம் ஒரு குப்பை மேடுதான். அங்கே தூசி கிளம்பும், சேறு புரளும், அழுக்கு மிகுந்திருக்கும், புழு பூச்சிகளும் முயல்களும் மயில்களும் உலவும். நீங்களும் வரலாம் தரையில் புரண்டு ஒரு நாளைக் கழிக்கலாம்.
நான் அங்கே குப்பையில் கிடப்பேன். நீங்களும் வரலாம்!
குப்பைமேனித் திருவிழாவிற்கு வாரீர்!
நான் அங்கே குப்பையில் கிடப்பேன். நீங்களும் வரலாம்!
குப்பைமேனித் திருவிழாவிற்கு வாரீர்!
No comments:
Post a Comment